இதில் கூறப்போகும் சங்கதிகள் அவைகளில் உள்ள நகைச் சுவையை தங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே. மற்றபடி இதன் கதாநாயகரை மட்டம் தட்டவோ இழிவு படுத்தவோ அல்ல. அவர் என் தொழிலின் ஆசான் என்று பொய் சொல்ல மனம் வராவிட்டாலும், அவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக் கொண்டேன். என் அலுவலகப் பணிகளை நம்பிக்கையுடன் எதிர் கொள்ள, இவரே காரணம். யார் இவர்? என் பாதையில் இவர் எங்கு எப்படி வந்து சேர்ந்தார்? உதகை சின்கோனா தணிக்கை என்றவுடன் இவருடைய நினைவு முந்திக் கொண்டு வருவது எதனால்? வந்தாரய்யா, மதுரை மேலூர் கருங்காலக் குறிச்சி தந்த சிங்கம், மரியாதைக்குரிய எனது ஆய்வாளரும், உதகை அலுவலகத் தலைவரும்! பெப்பரப் பெப்பரப்பே, பராக் பராக்!
ஜனவரி 76ன் முதல் வாரத்தில் வால்பாறை அருகிலுள்ள சின்கோனா என்ற மலைப் பிரதேசத்தில் தணிக்கை ஆரம்பம். ஒருமாத காலத்திற்கும் குறையாமல் அங்கேயே தங்க வேண்டும். இதற்கான ஆயத்தக் கூட்டத்தை எனது தலைவர் கோவையில் நடத்தினார். அவரைத்தவிர யாரும் வால்பாறைக்கு இதுவரை சென்றதே கிடையாது. எதை எப்படித் தணிக்கை செய்ய வேண்டும் என்று யாருக்கும் தெரியாது. கூட்டத்தில் தணிக்கையைத் தவிர மற்ற அனைத்தையும் தலைவர் பேசினார்.
"யோவ், அங்க சாப்பாடெல்லாம் கெடயாது. நாம தான் பொருளெல்லாம் வாங்கிக்கொடுக்கணும். என்ன தெரியுதா? எனறு ஆரம்பித்தார். ஒரு பேப்பர் எடுத்து நான் சொல்றதெல்லாம் எழுதுங்க. பிஞ்சி வெண்டிக்கா ஒரு கிலோ. பூப்பிஞ்சி கத்திரிக்கா ஒரு கிலோ" என்று ஆரம்பித்து காய் லிஸ்டு, மளிகை லிஸ்டு என்று அடுக்கிக் கொண்டே போனார். மதுரை ஸ்லேங்கில் கட்டைக் குரலில் அவர் சொல்லச் சொல்ல, எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவரைப் பார்த்து பயம் வேறு. கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டேன். பிஞ்சி வெண்டிக்கா வசனம் பின்னர் என் நண்பர்கள் மத்தியில் பெரிய ஹிட்.
இப்படியாக வாலிபர்கள் மூன்று பேரும் ( நரசிம்மன் தான் பாதியிலேயே கழன்று விட்டானே) நான்கு பை நிறைய இவைகளை நிரப்பிக் கொண்டு, கக்கத்தில் ஒரு குடையுடன் பஸ்ஸில் இடம்பிடித்து வால்பாறை சேர்ந்த அழகு இருக்கிறதே, அதைக் காண கண் கோடி வேண்டும். அப்புறம் அங்கு அவரிடம் நாங்கள் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது.
உதகை திரும்பியவுடன் எனது அறை நண்பர்களிடம் வெண்டிக்கா கத்திரிக்கா கதையை சுவைபட விவரிக்க, என் தலைவர் இன்ஸ்டண்ட் ஹிட். ஒரு சந்தோஷமான நாளில் அவரை என்னுடைய மெஸ்ஸில் சாப்பிட விருந்தாளியாக அழைத்திருந்தேன். அவர் அறைக்கு வந்ததும், இவரை அவர்களுக்கு அறிமுகம் செய்தேன். ஒரு அறை நண்பன் கால நேர விவஸ்தை இல்லாமல், "பிஞ்சு வெண்டிக்கா, பூப்பிஞ்சு கத்திரிக்கா இவர் தானா?" என்று கேட்டு வைக்க இவர் மூஞ்சி போன போக்கைப் பார்க்க வேண்டுமே . எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. இனி அவ்வளவு தான். 'முதலிலிருந்தே எனக்கும் அவருக்கும் ஆகாது. இது வேறயா'
ஆனால் அவர் எதையும் வெளிக்காட்டாமல் என்னுடன் சாப்பிட்டார். எல்லோருடனும் கலகலவென்று பேசி அனைவரையும் அட்ரேக்ட் செய்து விட்டார். முடிந்து வெளியே வந்தோம். நாங்கள் இருவர் மட்டும் தனிமையில். பூகம்பத்தை எதிர்பார்த்து நடுங்கிக் கொண்டிருந்தேன். "யோவ்! யார்யா அந்தாளு? என்னப் பத்தி கன்னா பின்னான்னு பேசறான்? யார் சொல்லிருப்பான்? எனக்கு அந்த துலுக்கன் மேல தான்யா சந்தேகம்" என்றாரே பார்க்கலாம். எனக்கு போன உயிர் மெல்லத் திரும்பியது. அவர் குறிப்பிட்டது என்னுடைய அலி என்ற அலுவலக நண்பரை. அவர் மேல் இவருக்கு இப்படிப் பட்ட சந்தேகம் எப்படி வந்தது என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்! இதை அலியிடமே நான் கூறி சிரி சிரியென்று சிரித்தேன். இப்படி என் தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போயிற்று.
குள்ளமான உருவம். கார்மேகக் கண்ணனை மிஞ்சும் வண்ணம். கறுப்புக் கண்ணாடி. நீலக் கலர் ஃபுல்கை ஸ்வெட்டர். சமபந்தமேயில்லாத வெள்ளை கறுப்பு கலந்த ஃபர் குல்லாய். உதட்டில் எப்பொழுதும் ஒரு சிகரெட். யாரையும் சிரிக்க வைக்கும் கட்டைக் குரல். எதிர்ப்பவர்களுக்கு சிம்ம சொப்னம். இவரே என் தலைவர். என்னுடைய துரதிருஷ்டமோ என்னவோ இவருக்கு என்னை ஆரம்பித்திலிருந்தே பிடிக்கவில்லை. அடிக்கடி எனக்கும் அவருக்கும் மோதல்கள் வரத் தொடங்கின. ஒரு நாள் ஈரோட்டிலுள்ள எங்களுடைய கிளை அலுவலகத்திலிருந்து கவர் ஒன்று வந்தது. தலைவர் அதை டர்ரென்று கிழித்து உள்ளே இருந்த கடிதத்தை எடுத்துப் படித்தார். என்னை ஒரு புழு போலப் பார்த்து, " இந்தா, பிடி. நீ வேல செஞ்ச லட்சணத்தப் பாரு. ஏன்யா வந்து கழுத்த அறுக்கறீங்க' என்று கடிதத்தைக்
கொடுத்தார். எனக்கு அங்கிருந்து ஒரு மெமோ வந்திருந்தது. நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. அதைப் படித்ததும் நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை விட்டேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவர்,' என்னையா சிரிக்கற? வெக்கமா இல்ல?' என்று குத்தினார். மேட்டர் இது தான். 'ஏதோ காங்கயம் டவுன் பஞ்சாயத்துத் தணிக்கையில் ஏதோ ஒன்றை சரி பார்க்காததால் அரசுக்கு இழப்பாம். என் தலையை ஏன் எடுக்கக் கூடாது? உடனே விளக்கம் தேவை' என்று இருந்தது. வேடிக்கை என்னவென்றால் அந்த ஊருக்கு நான் இதுவரை சென்றதேயில்லை. அப்புறம் தணிக்கையாவது?விடுதலாவது? வேறு யாருக்கோ அனுப்ப வேண்டியதை எனக்கு அனுப்பிவிட்டார்கள். அவ்வளவு தான். இதை தலைவரிடம் சொன்னவுடன் நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்து ,' அப்பிடின்னா அப்படியே எழுதிக் குடு பாப்பம்' என்று நக்கலாகக் கேட்டார். சற்றும் தயக்கமின்றி நானும் அதையே எழுதிக் கொடுத்தேன். சேரில் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தவர் அப்படியே சரிந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து வெளியே சென்று விட்டார். நானும் அன்று பிழைத்தேன்.
அவருக்கும் துறைத் தலைவருக்கும் பெரிய லடாய். இவருடைய இன்க்ரிமெண்ட்டைக் கூட கட் செய்திருந்தார்கள். தலைமை அலுவலகத்திலிருந்து அன்று ஒரு கடிதம் வந்திருந்தது. அதைப் படித்தவரின் முகம் மாறியது. படக்கென்று ட்ராயரைத் திறந்து கடிதத்தை உள்ளே போட்டு சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து பட்டென்று வெளியே சென்றவர் நான்கு நாட்கள் கழித்துத் தான் திரும்பி வந்தார்.
உள்ளே நுழைந்தும நுழையாததுமாய் , என்னிடம் ' எங்கய்யா அந்த லெட்டர்?' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "எந்த லெட்டர் சார்?' என்று பவ்யமாகக் கேட்டேன்.
"எதக்கேட்டாலும் திருத் திருன்னு முழி. அதான்யா அன்னிக்கு வந்த லெட்டர். உன்னயெல்லாம் வெச்சிட்டு நான் செரைக்கத் தான் போகணும். ஏன்யா என் உசுர எடுக்கறே?" என்று கத்த ஆரம்பித்து விட்டார். எனக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது. அவர் எதைக் கேட்கிறார் என்றே புரியவில்லை. நாங்கள் நால்வரும் திரும்பி நின்று அதைத் தேடுவது போல் பாவ்லா பண்ண ஆரம்பித்தோம். சட்டென்று, அன்று ட்ராயரில் போட்ட லெட்டராக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. உடனே அவருடைய மேஜை ட்ராயரில் தேடச் சென்றேன்.
"இங்கெனே என்ன இருக்கு? போய் அங்க தேடு" என்று சொல்லி அவருடைய ட்ராயரை இழுத்து பட்டென்று மூடினார். நாங்கள் தேடுவது போல் பாவ்லா செய்து கொண்டே இருந்தோம். என் கோபம் தலைக்கேறிக் கொண்டிருந்தது. என்னிடம் கொடுக்காத லெட்டரைப் பற்றி என்னைக் கேட்டால் என்ன செய்வது. மற்ற நண்பர்கள் அனைவரும் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார்கள். எதற்கோ அவருடைய ட்ராயரைத் திறந்து துளாவிய அவர் கையில் அந்தக் கடிதம் இருந்தது. "யோவ், ராமமூர்த்தி, இங்கனே இருக்குய்யா" என்று கூற, என் கோபத்தின் வெளிப்பாடாக
நான் என் கையிலிருந்த பெரிய கோப்பை தடாலெனக் கீழே போட, அதிர்ந்து விட்டார். இப்பொழுது என் முறை. "உங்க கிட்ட மனுஷன் வேல செய்ய மாட்டான்" என்று சத்தம் போட்டு விட்டு நான் வெளியே சென்று விட்டேன்.
என் ப்ரொபேஷன் கூட முடியாத காலம். என்னமோ சத்தம் போட்டு விட்டேனே தவிர உள்ளூர உதறல். ஆனால் கடைசி வரை என் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கோ ஏற்பட்ட விரக்தியில், வயதில் சிறியவர்களான எங்கள் மீது காட்டி இருக்கிறார். அவ்வளவு தான்.
இப்படிப் பட்ட நிகழ்ச்சிகள் ஒன்றா இரண்டா ? ஒரு நிலையில் இவருடைய புராணத்தை முடித்துக் கொள்வதே நல்லது என்று தோன்றுகிறது. என் உண்மையான எண்ணங்களை எழுத்தில் வடிக்க முடியாமல், ஏற்கனெவே இறைவனடி சேர்ந்து விட்ட அவரைப் பற்றி தரக் குறைவான எண்ணம் ஏற்படுவதற்குக் காரணம் ஆகி விடுவேனோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
ஒரு ஆறு மாதம் தான் இருந்தார். பின்னர் ஈரோட்டிற்கு மாறுதலாகிச் சென்று விட்டார். ஆனால் சின்கோனா அலுவலர்களிடத்திலும் எங்கள் நினைவிலும் நீங்கா இடம் பெற்றவர் இவரே.
No comments:
Post a Comment