Sunday, May 29, 2016

2.அந்த இரண்டு நாட்கள்


               காலை, என்னுடன் பணிபுரியப் போகும் நரசிம்மன், அவன் இருக்கும் விடுதிக்குக் கூட்டிச் சென்றான். அவன் காட்டிய அறையைப் பார்த்தவுடன் மயக்கமே வந்து விட்டது. அழுக்கு அறை. சூரிய வெளிச்சம் மருந்துக்குக் கூட கிடையாது. 3 நாட்களுக்கு ஒரு முறை தான் குளிப்பதற்கு தண்ணீர். 3 வேளை சாப்பாடுடன் சேர்த்து 130 ரூபாய் மாத வாடகை. சும்மாக் கிடைத்தாலும் அங்கு தங்க மனம் வராது. பட்டென்று ' வேண்டாம்' என்று கூறி விட்டேன். நரசிம்மனுக்கு வருத்தம். அவனும் என் போல ராவுஜி தான். அதற்காக என்ன செய்ய முடியும்?

                அலுவலகத்தில் அன்று நடந்தவை மிகவும் சுவாரஸ்யமானவை.  அவைகளை பின்னே விவரிக்கிறேன். இப்பொழுது, அறை ஒன்று பிடித்து முதலில் செட்டில் ஆக வேண்டும். மதியம் அன்னபூர்ணா ஓட்டலில் ( கோவை அன்னபூர்ணா அல்ல) சாப்பாடு. கல்லாவில் பெரியவர் ஒருவர் உட்கார்ந்து சாப்பாடு டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்தார். நெற்றி, கைகளில் திருநீறு தரித்து பளபளவென்று இருந்தார். இவரை எங்கயோ வித்தியாசமான இடத்தில் பார்த்த மாதிரி இருந்தது. சாப்பிடும் போது இதே நினைப்பு. யார், யார் என்று. திடீரென மண்டையில் பொறி தட்டியது. ஒரு சின்ன ஃப்ளேஷ் பேக்.

                   1971 ஆம் வருடம். நீலகிரி விரைவு வண்டியில் சென்னைக்கு பயணம். டூ டயர் கோச். அப்பொழுது த்ரீ டயர் கிடையாது. லோயர் பர்த்தில் நான். எதிரில் ஒரு பெரியவர். வண்டி அரக்கோணத்தில் நின்றது. தடதடவென ஐந்தாறு பேர் ஏறி அப்பர் பர்த்தில் உட்கார்ந்து எதிர் பர்த்தில் கால்களை நீட்டியபடி, சிகரெட் பிடித்துக்கொண்டே சத்தமாகப் பேசிக்கொண்டு வந்தனர். ஒரே புகை மண்டலம். பெரியவர் நல்ல உயரம். பாத்ரூம் போக எழும்போது, மேலே இருந்தவர்கள் மரியாதைக்குக் கூட கால்களை எடுக்கவில்லை. இவரும் தலைக் குனிந்து சென்று விட்டார். திரும்பி வரும் போதும் அவர்கள் கால்களை எடுக்கவில்லை. திடீரென பெரியவர் போட்ட கூச்சலில் கோச்சே ஆடிவிட்டது. ' என்னடா நினச்சுட்டிருக்கீங்க? போனால் போகுதுன்னு பாத்தா ரொம்ப ஓவராப் போறிங்க. என் வயசுக்குக்குக் கூட மரியாத தராமல், அப்படி என்னடா எகத்தாளம் ' என்று கத்த ஆரம்பிக்க, அவர்கள் குதித்து வேறு இடத்திற்குச் சென்று விட்டனர். இது மாதிரியான வீரச் செயல்களை கற்பனையில் செய்திருக்கிறேனே ஒழிய உண்மையில் நடத்திக் காட்டும் தில், அப்பொழுது என்னிடம் சுத்தமாக கிடையாது. இச் சம்பவம் எப்படியோ என் மனதில் அப்படியே உறைந்து விட்டது.

               இப்பொழுது புரிகிறதா? கல்லாவில் அமர்ந்திருந்த பெரியவர் யாரென்று. மெல்ல அவரிடம் சென்று, இதை நினைவு படுத்தினேன். அப்படியே மனுஷன் ஆடிப் போய் விட்டார். 'எப்படி தம்பி இவ்வளவு வருஷம் கழித்தும் அப்படியே ஞாபகம் வச்சிருக்கீங்க' என்று வியந்து என் ஞாபகத் திறனைப் புகழ ஆரம்பித்து விட்டார். மறக்க வேண்டியவைகளை மறக்காமலும், மறக்கக் கூடாதவைகளை அறவே மறப்பதும் என் சிறப்பான இயல்பு என்று அவருக்குத் தெரியாது. ஒரு நாள் முழுதும் என் அருகிலேயே பயணித்த ஒருவரை, நீங்கள் யார் என்று கேட்டு, என் நண்பர்களால் இன்றும் " மாமண்டூர்  ஜோக்கர்" என்ற புகழ் பெற்றவன் நான்.

                 இரவு நெருங்கியது. அறை கிடைத்த பாடில்லை. தமிழகம் ஓட்டலில் டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  ஜில் ஜில் தோசையை பிட்டு வாயில் வைத்தபடி சோகமாக சுற்று முற்றும் பார்த்தேன். தூரத்தில் தெரிந்த முகம் கண்ணில் பட்டது. அட, நம்ம தயாளன். என்னுடன் கல்லூரியில் படித்தவன். கொஞ்ச நேரம் கதைத்த பின், எங்கடா தங்கி இருக்கே என்று கேட்டான். என் சோகக் கதையைக் கேட்டவுடன், ' ஒண்ணும் கவலைப்பட படாதே. நான் சீதா லட்சுமி லாட்ஜில் தங்கி இருக்கிறேன். செட்டியாரிடம் சொல்லி உனக்கு ஒரு ரூம் ஏற்பாடு செய்யறேன்' என்று உறுதி அளித்து என் வயிற்றில் பால் வார்த்தான்.

                      மறு நாள் காலை  செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்தான். செட்டியார் ரொம்ப strict. சிகரட், தண்ணி, சீட்டாட்டம் எல்லாம் கூடவே கூடாது. குளிக்க தண்ணி கொடுக்கும் போது சண்டை போடக் கூடாது. இன்ன பிற. நல்ல வேளையாக அது வரைக்கும் நானும் சுத்த பத்தமாக, கள்ளம் கபடமில்லாமல் இருந்தது வசதியாகப் போய்  விட்டது. லாட்ஜும் சுத்தமாக நன்றாகவே இருந்தது. அங்கு இரண்டு பிரிவுகள். தற்காலிக அறைகள். மாத வாடகை ரூ 35. நிரந்தர அறைகள். மாத வாடகை ரூ 45. தற்காலிக அறைகளில் இருப்பவர்கள் மார்ச் 31 ஆம் தேதி காலி செய்து விட வேண்டும். அதற்கு வசதியாக, கல்லூரி விரிவுரையாளர்களையே அந்த அறைகளில் தங்க அனுமதித்திருந்தார். வெகேஷனில் காலி செய்வது எளிதல்லவா? எனக்கு தற்காலிக அறையே தந்தார். நன்னடத்தையை உறுதி செய்ய. என் நண்பன் தயாளன் கல்லூரி விரிவுரையாளர் என்று சொல்லத் தேவையில்லை. அன்று மாலையே அங்கு நான் குடியேறினேன்...............தொடரும்.     

அடுத்து வருவது:  சொர்க்கத்தின் திறப்பு விழா

No comments: