14/12/1975. அந்த நாள் என் வாழ்வின் இனிமையான நாள். இன்று வரை தொடரும் இனிய நினைவுகளுக்கும், தொடரும் நட்பு வட்டங்களுக்கும் வழி வகுத்த நாள். பணிமாறுதலின் காரணமாக முதன் முறையாக உதகைக்கு பொள்ளாச்சியிலிருந்து கூடலூர் செல்லும் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். துள்ளும் இளமை, கொப்பளிக்கும் உற்சாகம், குபீரென்று வெடித்துச் சிதறும் என் ட்ரேட் மார்க் சிரிபபு, அந்த வயதிற்கே இருந்த கன்னா பின்னா கற்பனைகள். இவைகளுடன் உதகைக்கு என் முதல் பயணம். 23 வயதிற்குப் பிறகு அரசின் தயவில் உதகை மலைப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். கல்லாரில் அடர்ந்த பாக்கு மரங்கள் அளித்த பிரமிப்பு, மலைப்பாதை துவங்கிய சிறிது நேரத்தில் வந்த பர்லியார், மரக்கடை, லாஸ் நீர் வீழ்ச்சி,எங்களுடனே பயணித்து, ஆங்காங்கே காட்சி அளித்த மலை ரயில் பாதை, காட்டேரி, தேயிலைத் தோட்டங்கள், கொண்டை ஊசி வளைவுகள், பனி மூட்டமான மேகங்கள் என ஒவ்வொன்றும் என் நினைவில் உற்சாகத்துடன் ஒட்டிக் கொண்டன.
உதகையை அடையும் போது ஏகப்பட்ட எதிர் பார்ப்புகள். தாங்க முடியாத குளிர். ஒருபுறம் லேக். இன்னொரு புறம் தாவரவியல் பூங்கா, எங்கு பார்த்தாலும் அழகிய பெண்கள், ஆங்காங்கே சினிமா படப்பிடிப்பு என்று நண்பர்கள் ஏத்தி விட்டதில், என் கற்பனை கண்ணும் சேர்ந்து என்னை கிறங்கடித்துக் கொண்டிருந்தது. காலை பதினொரு மணியளவில் உதகை கமர்ஷியல் சாலையில் கூட்டுறவு தங்கும் விடுதியில் அறை. வெறும் இருபது ரூபாய் கட்டணம் ஒரு நாளைக்கு! நல்ல வெயிலும் அடித்துக் கொண்டிருந்தது. சே, இவ்வளவு தானா ஊட்டி. இதையா குளிர் என்றார்கள்?
அறையில் பொருட்களை வைத்து விட்டு வெளியே வந்தேன். எந்தப் பக்கம் ஏரி எந்தப் பக்கம் பூங்கா இருக்கும் என்று மனம் அலைந்தது. 15ஆம் தேதி சின்கோனா தணிக்கைப் பிரிவை முதன்முதலாக ஆரம்பித்து பணியில் சேர வேண்டும். என்னுடைய அலுவலகத் தலைவர் அறிமுகம் கிடையாது. எவ்வளவு நாள் நாள் வாடகையில் தங்குவது? மாத வாடகைக்கு அறை ஒன்று பிடிக்க வேண்டும். எங்கிருந்து எப்படி ஆரம்பிக் வேண்டும் என்றுதெரியவில்லை.
குட்டிக்குட்டி குன்றுகளில் ஏறி அலுவலகத்தைக் கண்டு பிடித்தேன். அங்கே நரசிம்மன் என்ற கோவைப் பையனும் என்னுடன் பணியில், நஞ்சன் என்றொருவர். ஜஹாங்கீர் என்று இன்னொருவர். இது தவிர ஞானிமுத்துக் கருப்பன் என்ற ஆய்வர். இவரே என் அலுவலகத் தலைவர்.
படுகர்களின் அறிமுகம்.ஔ்ளங்கித்தீரா? சப்பேன குளி என்ற வார்த்தைகள் காதில் அடிக்கடி விழத் துவங்கின. எங்கேயோ சாப்பிட்டோம். அன்றைய பகல் பொழுதை எப்படியோ ஓட்டினோம. ரூம் கிடைத்த பாடில்லை. மாலை நெருங்கியது. மெல்ல மெல்ல குளிரஆரம்பித்தது. குளிர் என்றால் எனன என்பதை அப்பொழுது தான் உணர ஆரம்பித்தேன். என்னிடம் ஸ்வெட்டர் கூட கிடையாது.
இப்படி ஆரம்பித்தது என் முதல் நாள், உதகையில். உதகையின் மீதான என் ஈர்ப்பு எப்படி வளர்ந்தது, அங்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்கள், நான் சந்தித்த சுவையான மனிதர்கள் பற்றி பெரிய கதையே எழுதலாம். இன்று இவ்வளவு தான்.
ஏன் இன்று இதை ஆரம்பித்தேன்? சென்ற வாரம் முழுதும் அருவங்காட்டிலுள்ள என் தம்பி வீட்டில் தங்கியதின் விளைவுகள். இது தொடருமா? அல்லது இன்றோடு முடிந்து விடுமா? தெரியவில்லை
No comments:
Post a Comment