அடுத்தடுத்த இரண்டு நாட்களில் என் அலுவலகத் தலைவர் மூலமாக சுவையான சம்பவங்கள் நிகழ்ந்தன. இரண்டு நாட்கள் எங்களை வறுத்தெடுத்துவிட்டு வால்பாறைக்கு முகாம் சென்று விட்டார். எங்களுக்கு நிம்மதி பெருமூச்சு. ஒரு சுபயோக சுபதினத்தில் என்னுடைய கனவுலகமான தாவரவியல் பூங்காவிற்கு முதன் முறையாக நரசிம்மனுடன் சென்றேன்.
நரசிம்மன் அற்புதமான நபர். சற்றே நெடிய தேகம். பயந்த சுபாவம். பற்கள் சற்று தூக்கிய மாதிரி. மாத்வக் களை வழியும் முகம். குசு குசு என்று சுற்றும் முற்றும் பார்த்துத் தான் பேசுவார். நான் அதற்கு நேர்மாறு.
இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா தோகைக்கு வசந்த விழா என்று கீறல் விழுந்த பாட்டுத் தட்டைப் போல ஒரே பாட்டை பாடிக் கொண்டு என் டெம்போவை ஏற்றிக் கொண்டிருந்தார். "அழகுடைக் காதற் பெண்டிர் வண்ண வண்ண உடைகளில் சிறகுகளுடன் ஊ லல்லல்லா என்று வானில் மெல்லப் பறந்தபடி எங்களை வறவேற்கக் காத்திருப்பார்கள்" என்ற கனவில் மிதந்த படியே உள்ளே நுழைந்தேன். டிசம்பர் மாத மாலை நேரம். குளிர் ஆரம்பித்து விட்டது. உள்ளே கண்ணுக்கெட்டிய தூரம் ஒருவரையும்காணோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக வடஇந்திய ஜோடிகள். அனைவரும் ஸ்வெட்டரை கழுத்திலிருந்து கால் வரை பட்டன் போட்டு குளிருக்கெதிராக யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள். இவர் வேறு 'இன்று சொர்கத்தின் திறப்பு விழா' என்று எரிச்சலைக்
கிளப்பிக் கொண்டிருந்தார். கோபமாக " அந்தப் பாட்ட கொஞ்ச நேரம் நிறுத்தறீங்களா" என்று கத்தினேன். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. 'நவம்பர் டிசம்பரில் பசுமையே இல்ல, காஞ்சு போச்சுடா' என்று கத்தத் தோன்றியது.
எதிரே இருந்த புல் தரையின் தூர மூலையில் ஒரு கூட்டம் வட்டமாக நின்று கொண்டிருந்தது. நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. சினிமா ஷூட்டிங்கோ? விசில் சத்தம் வேறு பீங் பீங் என்று. அதை நோக்கி ஓடினோம்.
வசந்த மாளிகையில் சிவாஜி வாணிஸ்ரீயைப் பார்த்து, "எனக்கு மட்டும் சிறகுகளிருந்தால், வானத்தில் பறந்து நட்சத்திரங்களைப் பறித்து தோரணமாக தொங்க விட்டிருப்பேன்" என்பார். ஒரு பாட்டில் ' அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன். உன்னையல்லால் இன்னொரு பெண்ணை உள்ளத்தினாலும் தொட மாட்டேன்' என்பார். அந்த பாட்டுடைத் தலைவி தான் நின்று கொண்டிருந்தார். ஒரு பெண் எதிரே கையைக் காலை ஆட்டிக் கொண்டு மூவ்மெண்ட் சொல்லிக் கொடுக்க, இவர் அது போல கையைக் காலை ஆட்டுவதும் சேரில் அமர்வதுமாக இருந்தார். இது முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவரிடம் பெண்மையின் நளினம் சிறிதுகூட இல்லை. ரீல் வேறு ரியல் வேறு என்பதை உணர்ந்த தருணம். அதற்குப் பிறகு ஷூட்டிங் பார்க்கும் ஆசையே போய் விட்டது.
வெறுப்புடன் திரும்பினோம். நாட்கள் பல்வேறு சுவையான நிகழ்வுகளுடன் நகர்ந்தன. எங்களுடைய முதல் முகாம் பணியும் ஜனவரியில் ஆரம்பித்தது. வால்பாறைக்குச் செல்ல வேண்டும்.அந்த ஊரையும் அதுவரை நான் பார்த்ததில்லை. தலைவர், அங்கு நாங்கள் எதிர் கொள்ளவிருக்கும் இடையூறுகளைப் பற்றி கதையளந்து கொண்டிருந்தார். அங்கிருக்கும் ஐபியில் பாம்பு தேள் அதிகமாம். இரவு யானை கதவைத் தட்டுமாம். சாப்பாட்டுக்கு நாம் தான் மளிகை காய்கறிகளை பொள்ளாச்சியிலிருந்து கொண்டு செல்ல வேண்டுமாம்.
மறுபடியும் நரசிம்மன் புராணத்திற்கு வருவோம். நான், நஞ்சன் இருவரும் நேராக பொள்ளாச்சி சென்று எங்கள் வீட்டில் தங்கினோம். அலி மட்டும், கோவையிலுள்ள நரசிம்மன் வீட்டில் இறங்கி இரவு என் வீட்டிற்கு வருவதாக ஏற்பாடு. ஆனாம் அலி மட்டுமே வந்தார். அப்போ நரசிம்மன்? வேலையை ரிசைன் செய்து விட்டார். இந்தியன் வங்கியில் வேலை கிடைத்து விட்டது. " As I am suffering from fever, I am resigning this job" என்று எழுதிக் கொடுத்துவிட்டு, எங்களை நட்டாற்றில் அம்போவென்று விட்டுவிட்டு பறந்து விட்டார். சொல்ல இயலா சோகம் என்னை கவ்விக் கொண்டது.
இந்த அரசு தணிக்கைப் பணி ஆரம்பத்தில் பிடிக்கவேயில்லை. என் காலத்தில் வங்கிப் பணிக்குத் தான் க்ளேமர். இப்பொழுதிய ஐடி பணி மாதிரி. நானும் பல வங்கிகளின் டெஸ்ட் எழுதி அவைகளில் இலகுவாக தேர்ச்சி பெற்று விடுவேன். ஆனால் நேர் முகத் தேர்வில் படபடப்பு அதிகமாகி சொதப்பி விடுவேன். கைவசம் இந்தியன் வங்கித் தேர்வு ஒன்று தான் என் எதிர்பார்ப்பில் இருந்தது. காத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்றது தான் மிச்சம். நரசிம்மனுக்கு கிடைத்து விட்டதா? நமக்கு வழக்கம் போல் அம்போவா? மனம் பதை பதைத்தது.
நரசிம்மன் அவர்களை 1989 ஆம் வருடம் ஏதோ ஒரு மாதத்தில் கோவை ராஜ வீதியிலிருந்த இந்தியன் வங்கிக் கிளையில் எதேச்சையாக சந்தித்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. வெறும் 15 நாள் பழக்கம் தானே. தெரிந்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆப்பீசர் ஆகி இருந்தார். பழைய அன்பு சற்றும் குறையாமல் வெகு நேரம் சின்கோனா கதையைப் பேசினோம்.
இந்தியன் வங்கி என்றவுடன் அதனுடன் இணைந்த சூப்பர் அனுபவம் ஒன்று என் கண்களில் விரிகிறது. மகாபாரதத்தில் கிளைக் கதைகள் தவிர்க்க இயலாது அல்லவா?......தொடரும்
அடுத்து வருவது "டிக் டிக் டிக்"
பிகு சொர்கத்தின் திறப்பு விழா என்றவுடன் கன்னா பின்னா என்று கற்பனை செய்து எதிர்பார்த்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
No comments:
Post a Comment