Monday, June 20, 2016

பேராண்டி பெருமைகள்

                பைனாப்பிலர்

" தாத்தா பைனாப்பிலர் வாங்கிக்
குடுக்கிறயா? "
"அதுக்கென்ன கண்ணு வாங்கிக் குடுத்தாப் போச்சு "
"வா போலாம். அசோக் அப்பா புதுக்கட தெரியும். அங்க போலாம் "
" எனக்குத் தெரியாதே "
" வா நா காட்டறேன். "

என்னுடைய பெப்பில் ஜம்மென்று என் பேரன் ஏறி நின்று கொண்டான்.

"ஸ்ட்ரெயிட்டா போப்பா. அப்பறம் லெப்ட் திரும்பி ரெயிட் போ " இது பேரன். சென்னைப் பையனல்லவா? போப்பா, லெப்ட், ரெயிட்ல்லாம் அவனுக்கு சகஜம்.

கொஞ்ச தூரம் சென்றதும்

"இல்ல இல்ல, இப்டியே லெப்ட் போய் ரெயிட் போப்பா "
என்று வலது கையைக் காட்ட, நானும் அதைப் புரிந்து கொண்டு, ரெயிட் திரும்பி லெப்ட் எடுத்தேன். மவுண்ட் ஸ்டேஷனுக்கு அருகில் புதிதாக வந்துள்ள ஹெரிட்டேஜ்ஜைத் தான் கூறுகிறான் என்று உத்தேசித்து வண்டியை அங்கே விட்டேன்.  "இது இல்லப்பா " என்றான் பேரன்.  "அட சும்மா இருடா. இங்கில்லாத பைனாப்பிளா? "என்று இழுத்துச் சென்றேன். நல்லதாக ஒன்றை எடுத்து பில் போடச் செல்கையில் இது வேண்டாம் என ஒரேடியாக அடம் பிடித்தான். அப்பா புதுக்கடைக்கே போலாம் என்று அழுதான்.

அந்த புதுக்கடை எங்கு என்று எனக்குத் தெரியவில்லை. " பைனாப்பிள் வாங்க புதுக்கடை எதுக்குடா? " என்றவன் அவனுடைய,  கடையைக் காட்டும் தன்னம்பிக்கையில் மயங்கி ஆதம்பாக்கம் முழுதும் லெப்ட் ரெயிட் போய் கடைசியில் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டோம். அருகில் சரவணா மார்க்கட்டில் ஒரு பைனாப்பிள் வாங்க, அதுவும் வேண்டாமென்று பிடிவாதம் பிடித்தான். சலித்துப் போய், " உங்கப்பா கூடயே அந்தப் புதுக் கடயில் வாங்கிக்கோ "என்று கூற, " சரி, அந்த சூஸ் கடயில சூஸ்ஸாவது வாங்கிக் குடு" என்று எதிரிலுள்ள கடையைக் காட்டி அடம் பிடித்தான். அந்தக் கடை எனக்குப் பிடிக்காதென்றாலும், அவன் மழலையில் மயங்கி வாங்கிக் கொடுத்து வீடு திரும்பினேன்.

அவனுடைய அம்மா பள்ளியிலிருந்து திரும்பியவுடன், இந்த " இது இல்லப்பா, லெப்டுல போய் ரெயிட்டுல திரும்பு " கதையைக் கூற, நான் அவனுக்கு அதிகம் செல்லம் கொடுப்பதாக எனக்குத் தான் வசவு விழுந்தது.

கோடை விடுமுறையில், உதகையிலிருக்கும் என் தமையன் வீட்டிற்கு இந்த குட்டீஸையும் அழைத்துச் சென்றிருந்தோம். தாவரவியல் பூங்காவில் அரை நாள் பொழுதை இனிமையாகக் கழித்து விட்டுத் திரும்ப ஆரம்பித்தோம். பேரன் அவனுடைய அம்மா இடுப்பில். நான் அவர்கள் பின்னே. திடீரென்று அவன் பெரும் குரலெடுத்து, "தாத்தா! இந்த பைனாப்பிலர் வாங்கிக் குடு" என்று சத்தமிட்டுக் கூப்பிட, ஒரு வியாபாரி,        " ஒரு பைனாகுலர் நாப்பது ரூபா, நாப்பதே ரூபா " என்று கூறி என் பேரன் முகத்திற்கு நேரே ஆட்டிக் கொண்டிருந்தான்.

No comments: