Sunday, May 29, 2016

5. வெண்டிக்கா, பூப்பிஞ்சு கத்திரிக்கா

இதில் கூறப்போகும் சங்கதிகள் அவைகளில் உள்ள நகைச் சுவையை தங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே. மற்றபடி இதன் கதாநாயகரை மட்டம் தட்டவோ இழிவு படுத்தவோ அல்ல. அவர் என் தொழிலின் ஆசான் என்று பொய் சொல்ல மனம் வராவிட்டாலும், அவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக் கொண்டேன். என் அலுவலகப் பணிகளை நம்பிக்கையுடன் எதிர் கொள்ள, இவரே காரணம். யார் இவர்? என் பாதையில் இவர் எங்கு எப்படி வந்து சேர்ந்தார்? உதகை சின்கோனா தணிக்கை என்றவுடன் இவருடைய நினைவு முந்திக் கொண்டு வருவது எதனால்? வந்தாரய்யா, மதுரை மேலூர் கருங்காலக் குறிச்சி தந்த சிங்கம், மரியாதைக்குரிய எனது ஆய்வாளரும், உதகை அலுவலகத் தலைவரும்! பெப்பரப் பெப்பரப்பே, பராக் பராக்!

      ஜனவரி 76ன் முதல் வாரத்தில் வால்பாறை அருகிலுள்ள சின்கோனா என்ற மலைப் பிரதேசத்தில் தணிக்கை ஆரம்பம். ஒருமாத காலத்திற்கும் குறையாமல் அங்கேயே தங்க வேண்டும். இதற்கான ஆயத்தக் கூட்டத்தை  எனது தலைவர் கோவையில் நடத்தினார். அவரைத்தவிர யாரும் வால்பாறைக்கு இதுவரை சென்றதே கிடையாது. எதை எப்படித் தணிக்கை செய்ய வேண்டும் என்று யாருக்கும் தெரியாது. கூட்டத்தில் தணிக்கையைத் தவிர மற்ற அனைத்தையும் தலைவர் பேசினார்.
"யோவ், அங்க சாப்பாடெல்லாம் கெடயாது. நாம தான் பொருளெல்லாம் வாங்கிக்கொடுக்கணும். என்ன தெரியுதா? எனறு ஆரம்பித்தார். ஒரு பேப்பர் எடுத்து நான் சொல்றதெல்லாம் எழுதுங்க. பிஞ்சி வெண்டிக்கா ஒரு கிலோ. பூப்பிஞ்சி கத்திரிக்கா ஒரு கிலோ" என்று ஆரம்பித்து காய் லிஸ்டு, மளிகை லிஸ்டு என்று அடுக்கிக் கொண்டே போனார். மதுரை ஸ்லேங்கில் கட்டைக் குரலில் அவர் சொல்லச் சொல்ல, எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவரைப் பார்த்து பயம் வேறு. கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டேன். பிஞ்சி வெண்டிக்கா வசனம் பின்னர் என் நண்பர்கள் மத்தியில் பெரிய ஹிட்.

       இப்படியாக வாலிபர்கள் மூன்று பேரும் ( நரசிம்மன் தான் பாதியிலேயே கழன்று விட்டானே) நான்கு பை நிறைய இவைகளை நிரப்பிக் கொண்டு, கக்கத்தில் ஒரு குடையுடன் பஸ்ஸில் இடம்பிடித்து வால்பாறை சேர்ந்த அழகு இருக்கிறதே, அதைக் காண கண் கோடி வேண்டும். அப்புறம் அங்கு அவரிடம் நாங்கள் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது.
    உதகை திரும்பியவுடன் எனது அறை நண்பர்களிடம் வெண்டிக்கா கத்திரிக்கா கதையை சுவைபட விவரிக்க, என் தலைவர் இன்ஸ்டண்ட் ஹிட். ஒரு சந்தோஷமான நாளில் அவரை என்னுடைய மெஸ்ஸில் சாப்பிட விருந்தாளியாக அழைத்திருந்தேன். அவர் அறைக்கு வந்ததும், இவரை அவர்களுக்கு அறிமுகம் செய்தேன். ஒரு அறை நண்பன் கால நேர விவஸ்தை இல்லாமல், "பிஞ்சு வெண்டிக்கா, பூப்பிஞ்சு கத்திரிக்கா இவர் தானா?" என்று கேட்டு வைக்க இவர் மூஞ்சி போன போக்கைப் பார்க்க வேண்டுமே . எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. இனி அவ்வளவு தான். 'முதலிலிருந்தே எனக்கும் அவருக்கும் ஆகாது. இது வேறயா'
ஆனால் அவர் எதையும் வெளிக்காட்டாமல் என்னுடன் சாப்பிட்டார். எல்லோருடனும் கலகலவென்று பேசி அனைவரையும் அட்ரேக்ட் செய்து விட்டார். முடிந்து வெளியே வந்தோம். நாங்கள் இருவர் மட்டும் தனிமையில். பூகம்பத்தை எதிர்பார்த்து நடுங்கிக் கொண்டிருந்தேன். "யோவ்! யார்யா அந்தாளு? என்னப் பத்தி கன்னா பின்னான்னு பேசறான்? யார் சொல்லிருப்பான்? எனக்கு அந்த துலுக்கன் மேல தான்யா சந்தேகம்" என்றாரே பார்க்கலாம். எனக்கு போன உயிர் மெல்லத் திரும்பியது. அவர் குறிப்பிட்டது என்னுடைய அலி என்ற அலுவலக நண்பரை. அவர் மேல் இவருக்கு இப்படிப் பட்ட சந்தேகம் எப்படி வந்தது என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்! இதை அலியிடமே நான் கூறி சிரி சிரியென்று சிரித்தேன். இப்படி என் தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போயிற்று.

       குள்ளமான உருவம். கார்மேகக் கண்ணனை மிஞ்சும் வண்ணம். கறுப்புக் கண்ணாடி. நீலக் கலர் ஃபுல்கை ஸ்வெட்டர். சமபந்தமேயில்லாத வெள்ளை கறுப்பு கலந்த ஃபர் குல்லாய். உதட்டில் எப்பொழுதும் ஒரு சிகரெட். யாரையும் சிரிக்க வைக்கும் கட்டைக் குரல். எதிர்ப்பவர்களுக்கு சிம்ம சொப்னம். இவரே என் தலைவர். என்னுடைய துரதிருஷ்டமோ என்னவோ இவருக்கு என்னை ஆரம்பித்திலிருந்தே பிடிக்கவில்லை. அடிக்கடி எனக்கும் அவருக்கும் மோதல்கள் வரத் தொடங்கின. ஒரு நாள் ஈரோட்டிலுள்ள எங்களுடைய கிளை அலுவலகத்திலிருந்து கவர் ஒன்று வந்தது.  தலைவர் அதை டர்ரென்று கிழித்து உள்ளே இருந்த கடிதத்தை எடுத்துப் படித்தார். என்னை ஒரு புழு போலப் பார்த்து, " இந்தா, பிடி. நீ வேல செஞ்ச லட்சணத்தப் பாரு. ஏன்யா வந்து கழுத்த அறுக்கறீங்க' என்று கடிதத்தைக்
கொடுத்தார். எனக்கு அங்கிருந்து ஒரு மெமோ வந்திருந்தது. நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. அதைப் படித்ததும் நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை விட்டேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவர்,' என்னையா சிரிக்கற? வெக்கமா இல்ல?' என்று குத்தினார். மேட்டர் இது தான். 'ஏதோ காங்கயம் டவுன் பஞ்சாயத்துத் தணிக்கையில் ஏதோ ஒன்றை சரி பார்க்காததால் அரசுக்கு இழப்பாம். என் தலையை ஏன் எடுக்கக் கூடாது? உடனே விளக்கம் தேவை' என்று இருந்தது. வேடிக்கை என்னவென்றால் அந்த ஊருக்கு நான் இதுவரை சென்றதேயில்லை. அப்புறம் தணிக்கையாவது?விடுதலாவது?  வேறு யாருக்கோ அனுப்ப வேண்டியதை எனக்கு அனுப்பிவிட்டார்கள். அவ்வளவு தான். இதை தலைவரிடம் சொன்னவுடன் நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்து ,' அப்பிடின்னா அப்படியே எழுதிக் குடு பாப்பம்' என்று நக்கலாகக் கேட்டார். சற்றும் தயக்கமின்றி நானும் அதையே எழுதிக் கொடுத்தேன். சேரில் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தவர் அப்படியே சரிந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து வெளியே சென்று விட்டார். நானும் அன்று பிழைத்தேன்.
       அவருக்கும் துறைத் தலைவருக்கும் பெரிய லடாய். இவருடைய இன்க்ரிமெண்ட்டைக் கூட கட் செய்திருந்தார்கள். தலைமை அலுவலகத்திலிருந்து அன்று ஒரு கடிதம் வந்திருந்தது. அதைப் படித்தவரின் முகம் மாறியது. படக்கென்று ட்ராயரைத் திறந்து கடிதத்தை உள்ளே போட்டு சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து பட்டென்று வெளியே சென்றவர் நான்கு நாட்கள் கழித்துத் தான் திரும்பி வந்தார்.

உள்ளே நுழைந்தும நுழையாததுமாய் , என்னிடம் ' எங்கய்யா அந்த லெட்டர்?' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "எந்த லெட்டர் சார்?' என்று பவ்யமாகக் கேட்டேன்.
"எதக்கேட்டாலும் திருத் திருன்னு முழி. அதான்யா அன்னிக்கு வந்த லெட்டர். உன்னயெல்லாம் வெச்சிட்டு நான் செரைக்கத் தான் போகணும். ஏன்யா என் உசுர எடுக்கறே?" என்று கத்த ஆரம்பித்து விட்டார். எனக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது. அவர் எதைக் கேட்கிறார் என்றே புரியவில்லை. நாங்கள் நால்வரும் திரும்பி நின்று அதைத் தேடுவது போல் பாவ்லா பண்ண ஆரம்பித்தோம். சட்டென்று, அன்று ட்ராயரில் போட்ட லெட்டராக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. உடனே அவருடைய மேஜை ட்ராயரில் தேடச் சென்றேன்.
"இங்கெனே என்ன இருக்கு? போய் அங்க தேடு" என்று சொல்லி அவருடைய ட்ராயரை இழுத்து பட்டென்று மூடினார். நாங்கள் தேடுவது போல் பாவ்லா செய்து கொண்டே இருந்தோம். என் கோபம் தலைக்கேறிக் கொண்டிருந்தது. என்னிடம் கொடுக்காத லெட்டரைப் பற்றி என்னைக் கேட்டால் என்ன செய்வது. மற்ற நண்பர்கள் அனைவரும் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார்கள். எதற்கோ அவருடைய ட்ராயரைத் திறந்து துளாவிய அவர் கையில் அந்தக் கடிதம் இருந்தது. "யோவ், ராமமூர்த்தி, இங்கனே இருக்குய்யா" என்று கூற, என் கோபத்தின் வெளிப்பாடாக
நான் என் கையிலிருந்த பெரிய கோப்பை தடாலெனக் கீழே போட, அதிர்ந்து விட்டார். இப்பொழுது என் முறை. "உங்க கிட்ட மனுஷன் வேல செய்ய மாட்டான்" என்று சத்தம் போட்டு விட்டு நான் வெளியே சென்று விட்டேன்.
     என் ப்ரொபேஷன் கூட முடியாத காலம். என்னமோ சத்தம் போட்டு விட்டேனே தவிர உள்ளூர உதறல். ஆனால் கடைசி வரை என் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கோ ஏற்பட்ட விரக்தியில், வயதில் சிறியவர்களான எங்கள் மீது காட்டி இருக்கிறார். அவ்வளவு தான்.

       இப்படிப் பட்ட நிகழ்ச்சிகள்  ஒன்றா இரண்டா ? ஒரு நிலையில் இவருடைய புராணத்தை முடித்துக் கொள்வதே நல்லது என்று தோன்றுகிறது. என் உண்மையான எண்ணங்களை எழுத்தில் வடிக்க முடியாமல், ஏற்கனெவே இறைவனடி சேர்ந்து விட்ட அவரைப் பற்றி தரக் குறைவான எண்ணம் ஏற்படுவதற்குக் காரணம் ஆகி விடுவேனோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

        ஒரு ஆறு மாதம் தான் இருந்தார். பின்னர் ஈரோட்டிற்கு மாறுதலாகிச் சென்று விட்டார். ஆனால் சின்கோனா அலுவலர்களிடத்திலும் எங்கள் நினைவிலும் நீங்கா இடம் பெற்றவர் இவரே.

4. திக் திக் திகில்


    ஆகஸ்ட், செப்டம்பர்களில் இந்தியன் வங்கி எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்று நேர் முகத் தேர்வில் வழக்கம் போல் படு மோசமாக சொதப்பி முடிவுக்காகக் காத்திருந்தேன்.  ஒரு நாள் என் தந்தையிடம் பத்திரம் எழுத ஒருவர் வந்திருந்தார். தந்தைக்கு நன்கு அறிமுகமானவர். வால்பாறையில் வியாபாரம். ஏதோ ஒரு பேச்சில் அவருடைய பையனுக்கு சிபாரிசு மூலம் இந்தியன் வங்கியில் பணி கிடைத்ததைப் பற்றிக் கூறினார். என் தந்தையும் என் ஆசையைத் தெரிந்து, என் பையனுக்கும் சிபாரிசு செய்ய முடியுமா? என்று கேட்டார். ஆயிரம் ருபா செலவாகும் சாமி, பரவாயில்லையா? என்று அவர் கேட்க, தந்தையும், அதுக்கென்ன, பரவாயில்லை என்று கூறினார். ஒரு நன்னாளில் நானும் அவரும் சென்னை பயணமானோம். இவைகள் அனைத்தும், நான் உதகைக்கு மாறுதலில் செல்வதற்கு முன் நிகழ்ந்தவை.

      சற்றே பாரியான தேகம். சரியாக வாராத தலை. காதுகளில் கடுக்கன். பெரும்பாலான  கைவிரல்களில் பெரிய பெரிய மோதிரங்கள். தொள தொளவென்று பெரிய கைகள், தொங்கும் பாக்கட் உடைய காமராசர் பாணி சர்ட். வேட்டி.  வெள்ளந்தியான வியாபார நோக்குடைய பேச்சு. இது தான் என்னைக் கூட்டிக் கொண்டு சென்றவரின் சாமுத்ரிகா லட்சணங்கள். சென்னை வந்தவுடன் ஸ்டேஷனுக்கு அருகிலேயே ரூம் பிடித்தோம். நான் ஏதோ பேச, அவர் ஏதோ பேச சென்னை மாநகரில் நடந்தோம். ஆரம்ப சிரம பரிகாரத்திற்குப் பின் ஆட்டோவில் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அது மழைக் காலம். எங்கு பார்த்தாலும் சாலைகளில் தண்ணீர். பார்க்கப் போகிறவர் ஏதோ மந்திரியின் பி ஏவாம். அவரைப் பார்த்தோம். சாப்பிட ஆப்பிள் டீ கொடுத்து உபசரித்தார். விஷயத்திற்கு வந்தவுடன், அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை. வாங்கிறலாம், என்றார். அப்படியே நான் வானத்தில் பறந்தேன். நம்ம ஆள் ஆயிரம் ருபாய் கவரை நீட்டியவுடன் கூச்சத்துடன் பவ்யமாக வாங்கிக் கொண்டார். அது அந்தக் காலம். இந்த மாதிரியான கவர் கலாசாரத்தின் ஆரம்ப கட்டம். அது மேலும் மேலும் பல்கிப் பெருகியதில் என் ஆரம்பப் பங்களிப்பு என்பதை நினைக்கும் போது நெஞ்சம் விம்முகிறது.

      வங்கி அதிகாரியிடம் அறிமுகம். அந்த ஆள் எங்களை  உள்ளேயே விடவில்லை. நிற்க வைத்துப் பேசி அனுப்பி விட்டார். வேலை முடிந்தது. இரவும் வெகு நேரம் ஆகி விட்டது. மறுநாள் காலை வெஸட் கோஸ்ட் விரைவு வண்டியில் ஊர் திரும்ப திட்டம்.

          
        காலை மிகவும் முன்னதாகவே அறையைக் காலி செய்து ஸ்டேஷனுக்கு வந்தோம். ரிசர்வேஷன் எதுவும் கிடையாது. அப்பொழுது instant reservation க்கு ஒரு கவுண்டர் இருக்கும். கூட்டமும் அதிகமில்லாததால், அதில் முயற்சி செய்து பார்க்கலாம் என்று அந்த வரிசையில் நின்று கொண்டேன். அவரை ஓரித்தில் உட்காரச் சொல்லி விட்டேன். வரிசை மெதுவாகச் சென்று கொண்டிருந்தது.

        திடீரென்று மிகுந்த பரவசத்துடன் அவர் என்னிடம் ஓடி வந்தார். "தம்பி வாங்க போலாம். ரயிலெல்லாம் வேண்டாம். கார்ல போலாம்"என்றார்.
"என்னங்க, ரொம்ப செலவாகுமே" என்றேன். " இல்ல தம்பி, நம்ப ஒறம்பறையோட (relation)கார் ஒண்ணு  நெகமம் வரைக்கும் போகுது. எனக்கு மச்சான் முறையாகுது. அவுரு சினிமா டைரக்டரா இங்க இருக்காரு. சிவாஜி ஷீட்டிங்காம். அதிலேயே போயிறலாம்" எனறார். சினிமா எனறவுடன் நான் பின் வாங்க ஆரம்பித்தேன். சினிமாக்காரங்களையெல்லாம் நம்ப முடியாதுங்க. லேட்டாகும். நாம ட்ரெயினிலேயே போயிறலாம் என்றேன். அவர் கெஞ்ச ஆரம்பித்தார். 'சரின்னு சொல்லிட்டேன் தம்பி. இப்ப முடியாதுன்னா தப்பா நெனச்சுக்குவாறு. சொந்தம் பாருங்க என்றார். ரொம்ப நல்ல மனுஷன். நான் அறிமுகப் படுத்தி வைக்கிறேன்' என்று கூறி அவரை அழைத்து வந்தார்.

கசங்கிய சர்ட், லோஃபர் லுக்குடன் இருந்த ஒருவரை எனக்கு அறிமுகம் செய்தார். பார்த்த உடனே பிடிக்கவில்லை. மது வாடை வேறு. என் நெற்றி சுழிந்து என் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. அதை அவர் எதிர்பார்த்தது போல பேசத் தொடங்கினார். " தம்பி. சின்ன வயசுலேயே சினிமா ஆசையிலே இங்க வந்துட்டேன். சினிமாங்கறதால இந்த மாதிரி சின்ன சின்ன கெட்ட பழக்கம் வந்துருச்சு. தப்பா நினைக்காதீங்க" என்றார். நானும் வெற்றிப் பெருமிதத்தில், ' that is OK 'என்றேன். என்னுடன் வந்த பெரியவர், "மாப்ள, இவரும் நம்மூரு தான். பொள்ளாச்சி" எனறார். " பொள்ளாச்சிங்களா, ரொம்ப சந்தோஷம். பொள்ளாச்சில எங்க? என்று நெற்றியை சுருக்கிக் கேட்டார். பொள்ளாச்சி என்றவுடன் நானும் உற்சாகமாகி,"அதாங்க, கடைவீதிக்குப் பக்கம் ராமர் கோவில் வீதி" என்றேன். அய்யோ! அங்க எல்லாரையும் எனக்குப் பழக்கமே, உங்க வீடு..." என்று மீண்டும் நெற்றியைச் சுருக்க, என்னுடைய உற்சாகம் கரை புரண்டோடியது. "சந்துக்குத் தொட்ட மாறி முத வீடுங்க" என்றேன். அவர் தலையில் கை வைத்து எதையோ நினைவு கூற முயற்சிக்க, நான்" அதாங்க, கணக்கய்யர் வீடு, அய்யா கொஞ்சம் குள்ளமா இருப்பாரே" எனறு எடுத்துக் கொடுக்க, ஒரே அன்னியோன்னியம். "சாமியோட மகருங்களா நீங்க? எங்க குடும்பத்துக்கு அய்யா செஞ்சது கொஞ்ச நஞ்சமில்லிங்க" என்றவுடன், என் தந்தையைப் பற்றிய பெருமிதத்தால் நெஞ்சம் விம்மியது.
வெளியே மழை தூற ஆரம்பித்திருந்தது. "பக்கதுல சிவாஜிய வச்சு ஷூட்டிங் நடக்குது. மழைல உங்களுக்கு எதுக்கு சிரமம். பெரியவர் ஆசைப்படறார். அவரை மட்டும் கூட்டிட்டுப் போய் காரை எடுத்துட்டு வந்துடுறேன் " என்று கூறி என்னை விட்டு விட்டு பெரியவரை மட்டும் அந்த ஒறம்பர டைரக்டர் வெளியே கூட்டிச் சென்றான். இதற்குள் மழை பெரிதாக ஊற்ற ஆரம்பித்து விட்டது.

இவருக்காக காத்திருந்து ஸ்டேஷனிலேயே அமர்ந்திருந்தேன். ஐந்து நிமிடம் கழிந்திருக்கும். எங்கிருந்தோ பத்து கடாமுடா ஆசாமிகள் என்னை சுற்றி வளைத்தனர். அறண்டு போய் நான் முழிக்க, சென்னை பாஷையில் ஆரம்பித்தனர். '" இன்னாபா, பெரியவரைஇட்டாண்டு போன ஆள உனக்குத் தெரியுமா? " என்று கேட்டனர். நான் தெரியாது என்றவுடன், எப்படி அவங்க கூட அனுப்பினே , என்று அடிக்காத குறையாகக் கேட்டனர். பெரியவருக்கு சொந்தம் என்றேன். யார் சொன்னா என்று அதட்டினர். அவர் தான் சொன்னார் என்றேன். அவர்கள் அடுத்துக் கூறிய விபரங்கள் என்னை மூர்ச்சையடையச் செய்தன. அப்பொழுது சென்னையில் பிரபலமாயிருந்த விஷ ஊசி கொலைகளைச் செய்த கும்பல் போன்றவர்களாம். இரண்டு நாட்களாக எங்களைப் பின் தொடர்ந்து அவரை மட்டும் என்னிடமிருந்து பிரித்து, அவரிடமிருந்த பணத்தையும் வைர மோதிரம் கடுக்கன்களைத் திருடி விட்டு கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தார்களாம். என் நெஞ்சம் பதறத் தொடங்கியது. என்ன செய்வதென்று தெரியவில்லை. பெரியவரை எப்படியாவது காப்பாற்று என்று கூறி விட்டு வந்தவர்கள் மறைந்து விட்டனர். யாரை நம்புவது, யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. குருட்டாம் போக்காக வெளியே வந்து தேடினேன். வாலாஜா சாலை அருகில் இருந்த கேட் அருகில் நின்றிருந்தார். டைரக்டரைக் காணவில்லை. சட்டென்று அவரை இழுத்து எதுவும் பேச வேண்டாம் என்று கூறி ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டேன். வண்டியை மவுண்ட் ரோடுக்கு விடச் சொன்னேன். படபடப்பு அடங்கவில்லை. என்னை யாரோ பின் தொடர்வது மாதிரியே ஃபீலிங். பசி வேறு. மவுண்ட் ரோடில் இருந்த கூட்டமான ஓட்டலில் சாப்பிட்டோம். அவர் கேட்ட கேள்விகளுக்கு எதுவும் நான் பதிலளிக்கவில்லை. இரவு தான் இனி வண்டி. சென்ட்ரல் பக்கம் செல்லவே பயமாக இருந்தது. தேவி தியேட்டரில் க்ரேசி பாய்ஸ் ஆப் த கேம்ஸ் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டு டிக்கட் வாங்கி உள்ளே சென்று ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.

பெரியவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, அந்த டைரக்டர் எவ்வளவு காலமாகத் தெரியும் என்பது தான். இன்னிக்குக் காலயில தான் அந்தாளப் பாக்குறேன்
எனறாரே பார்க்கலாம். அப்புறம் எப்படி சொந்தம் அப்டி இப்டின்னு சொன்னீங்கன்னு கோபமாகக் கேட்டேன். நடந்தது இது தான்

நான் டிக்கட் வாங்க நின்றிருந்த போது வெளியே விளம்பரத்திற்காக ஷோ கேஸில் இருந்த பொருட்களைப் பார்த்து வாய் விட்டு தனக்குத் தானே ஏதோ கமெண்ட் அடித்திருக்கிறார். பக்கத்தில் வந்த அவன், நானும் அதையே தான் நெனச்சேன் என்று பேச்சை ஆரம்பித்திருக்கிறான். என்னிடம் போட்டு வாங்கிய மாதிரி, இவரிடமே இவர் பற்றிய அத்தனை விபரங்களையும் கறந்து, மாப்ள லெவலுக்கு இவரை நம்ப வைத்து விட்டான். எனக்கு தலை சுற்றியது. இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்னமா நடித்தான்? நானும் நம்பி என்னைப் பற்றிய அத்தனை விபரங்களையும் கூறி உள்ளேனே.

படத்தில் மனம் ஒட்டவில்லை. நல்லபடியாக ஊர் திரும்ப வேண்டுமே என்ற கவலை. மீண்டும் ஸ்டேஷன் போக பயம். ஆனால் போய்த் தான் ஆக வேண்டும். படம் விட்டதும் மெல்ல ஸ்டேஷனுக்குள் பம்பிப் பம்பி சென்றோம். யாரைப் பார்த்தாலும் பயமாக இருந்தது. நல்ல வேளையாக ஏதோ ஒரு வண்டி கோவைக்கு புறப்படத் தயாராக இருந்தது. அடித்துப் பிடித்து டிக்கட் வாங்கி கூட்டத்தில் வண்டியில் இடம் பிடித்த பின்னரே பெருமூச்சு வந்தது.

மேலே எழுதியது அனைத்தும் அக் மார்க் உண்மைகள். இப்பொழுது கூட நெஞ்சு படபடக்கிறது. வண்டியில் அமர்ந்தவுடன் பெரியவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டார். மோசம் போக இருந்தோம். நல்ல வேளை தப்பித்து விட்டோம். ஊர்ல யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. என் மானம் போய் விடும் என்றாரே பார்க்கலாம்.

இவ்வளவு த்ரில்லிங்கான அனுபவத்தை நண்பர்களிடம் கூட கூறாவிட்டால் என் மண்டை வெடித்து சுக்கு நூறாகிவிடுமே!

இப்படியாய் முடிந்த வங்கிப் பணிக்கான முடிவுகளைத் தான் எதிர்பார்த்திருந்தேன். என் துர் அதிர்ஷ்டமோ இல்லை எனது அரசுத் துறையின் அதிர்ஷ்டமோ, 31/12/1975 அன்று கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது. ( emergency period) எனனுடைய வங்கிப் பணி கனவும் தகர்ந்தது. கடைசி வரை பணி ஆணை வரவேயில்லை.

Tail piece: என்னிடம் பணம் வாங்கிய நபர் வேலை முடியாததால் ஐநூறு ரூபாயைத் திரும்ப அளித்து விட்டார். என்ன ஒரு நேர்மை!

3. சொர்கத்தின் திறப்பு விழா

     அடுத்தடுத்த இரண்டு நாட்களில் என் அலுவலகத் தலைவர் மூலமாக சுவையான சம்பவங்கள் நிகழ்ந்தன. இரண்டு நாட்கள் எங்களை வறுத்தெடுத்துவிட்டு வால்பாறைக்கு முகாம் சென்று விட்டார். எங்களுக்கு நிம்மதி பெருமூச்சு. ஒரு சுபயோக சுபதினத்தில் என்னுடைய கனவுலகமான தாவரவியல் பூங்காவிற்கு முதன் முறையாக நரசிம்மனுடன் சென்றேன்.

       நரசிம்மன் அற்புதமான நபர். சற்றே நெடிய தேகம். பயந்த சுபாவம். பற்கள் சற்று தூக்கிய மாதிரி. மாத்வக் களை வழியும் முகம். குசு குசு என்று சுற்றும் முற்றும் பார்த்துத் தான் பேசுவார். நான் அதற்கு நேர்மாறு.

    இன்று சொர்க்கத்தின்  திறப்பு விழா தோகைக்கு வசந்த விழா என்று கீறல் விழுந்த பாட்டுத் தட்டைப் போல ஒரே பாட்டை பாடிக் கொண்டு என் டெம்போவை ஏற்றிக் கொண்டிருந்தார். "அழகுடைக் காதற்  பெண்டிர் வண்ண வண்ண உடைகளில் சிறகுகளுடன் ஊ லல்லல்லா என்று வானில் மெல்லப் பறந்தபடி எங்களை வறவேற்கக் காத்திருப்பார்கள்" என்ற கனவில் மிதந்த படியே உள்ளே நுழைந்தேன். டிசம்பர் மாத மாலை நேரம். குளிர் ஆரம்பித்து விட்டது. உள்ளே கண்ணுக்கெட்டிய தூரம் ஒருவரையும்காணோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக வடஇந்திய ஜோடிகள். அனைவரும் ஸ்வெட்டரை கழுத்திலிருந்து கால் வரை பட்டன் போட்டு குளிருக்கெதிராக யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.  இவர் வேறு 'இன்று சொர்கத்தின் திறப்பு விழா' என்று எரிச்சலைக்
கிளப்பிக் கொண்டிருந்தார். கோபமாக " அந்தப் பாட்ட கொஞ்ச நேரம் நிறுத்தறீங்களா" என்று  கத்தினேன். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. 'நவம்பர் டிசம்பரில் பசுமையே இல்ல, காஞ்சு போச்சுடா' என்று கத்தத் தோன்றியது.

       எதிரே இருந்த புல் தரையின்  தூர மூலையில் ஒரு கூட்டம் வட்டமாக நின்று கொண்டிருந்தது. நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. சினிமா ஷூட்டிங்கோ? விசில் சத்தம் வேறு பீங் பீங் என்று. அதை நோக்கி ஓடினோம்.

      வசந்த மாளிகையில் சிவாஜி வாணிஸ்ரீயைப் பார்த்து, "எனக்கு மட்டும் சிறகுகளிருந்தால், வானத்தில் பறந்து நட்சத்திரங்களைப் பறித்து தோரணமாக தொங்க விட்டிருப்பேன்" என்பார். ஒரு பாட்டில் ' அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன். உன்னையல்லால் இன்னொரு பெண்ணை உள்ளத்தினாலும் தொட மாட்டேன்' என்பார். அந்த பாட்டுடைத் தலைவி தான் நின்று கொண்டிருந்தார். ஒரு பெண் எதிரே கையைக் காலை ஆட்டிக் கொண்டு மூவ்மெண்ட் சொல்லிக் கொடுக்க, இவர் அது போல கையைக் காலை ஆட்டுவதும் சேரில் அமர்வதுமாக இருந்தார். இது முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவரிடம் பெண்மையின் நளினம் சிறிதுகூட இல்லை. ரீல் வேறு ரியல் வேறு என்பதை உணர்ந்த தருணம். அதற்குப் பிறகு ஷூட்டிங் பார்க்கும் ஆசையே போய் விட்டது.

        வெறுப்புடன் திரும்பினோம். நாட்கள் பல்வேறு சுவையான நிகழ்வுகளுடன் நகர்ந்தன. எங்களுடைய முதல் முகாம் பணியும் ஜனவரியில் ஆரம்பித்தது. வால்பாறைக்குச் செல்ல வேண்டும்.அந்த ஊரையும் அதுவரை நான் பார்த்ததில்லை. தலைவர், அங்கு நாங்கள் எதிர் கொள்ளவிருக்கும் இடையூறுகளைப் பற்றி கதையளந்து கொண்டிருந்தார். அங்கிருக்கும் ஐபியில் பாம்பு தேள் அதிகமாம். இரவு யானை கதவைத்  தட்டுமாம். சாப்பாட்டுக்கு நாம் தான் மளிகை காய்கறிகளை பொள்ளாச்சியிலிருந்து கொண்டு செல்ல வேண்டுமாம்.
          மறுபடியும் நரசிம்மன் புராணத்திற்கு வருவோம். நான், நஞ்சன் இருவரும் நேராக பொள்ளாச்சி சென்று எங்கள் வீட்டில் தங்கினோம். அலி மட்டும், கோவையிலுள்ள நரசிம்மன் வீட்டில் இறங்கி இரவு என் வீட்டிற்கு வருவதாக ஏற்பாடு. ஆனாம் அலி மட்டுமே வந்தார். அப்போ நரசிம்மன்? வேலையை ரிசைன் செய்து விட்டார். இந்தியன் வங்கியில் வேலை கிடைத்து விட்டது. " As I am suffering from fever, I am resigning this job" என்று எழுதிக் கொடுத்துவிட்டு, எங்களை நட்டாற்றில் அம்போவென்று விட்டுவிட்டு பறந்து விட்டார். சொல்ல இயலா சோகம் என்னை கவ்விக் கொண்டது.

       இந்த அரசு தணிக்கைப் பணி ஆரம்பத்தில் பிடிக்கவேயில்லை. என் காலத்தில் வங்கிப் பணிக்குத் தான் க்ளேமர். இப்பொழுதிய ஐடி பணி மாதிரி. நானும் பல வங்கிகளின் டெஸ்ட் எழுதி அவைகளில் இலகுவாக தேர்ச்சி பெற்று விடுவேன். ஆனால் நேர் முகத் தேர்வில் படபடப்பு அதிகமாகி சொதப்பி விடுவேன். கைவசம் இந்தியன் வங்கித் தேர்வு ஒன்று தான் என் எதிர்பார்ப்பில் இருந்தது. காத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்றது தான் மிச்சம். நரசிம்மனுக்கு கிடைத்து விட்டதா? நமக்கு வழக்கம் போல் அம்போவா? மனம் பதை பதைத்தது.

நரசிம்மன் அவர்களை 1989 ஆம் வருடம் ஏதோ ஒரு மாதத்தில் கோவை ராஜ வீதியிலிருந்த இந்தியன் வங்கிக் கிளையில் எதேச்சையாக சந்தித்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. வெறும் 15 நாள் பழக்கம் தானே. தெரிந்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆப்பீசர் ஆகி இருந்தார். பழைய அன்பு சற்றும் குறையாமல் வெகு நேரம் சின்கோனா கதையைப் பேசினோம்.

        இந்தியன் வங்கி என்றவுடன் அதனுடன் இணைந்த சூப்பர் அனுபவம் ஒன்று என் கண்களில் விரிகிறது. மகாபாரதத்தில் கிளைக் கதைகள் தவிர்க்க இயலாது அல்லவா?......தொடரும்

அடுத்து வருவது     "டிக் டிக் டிக்"

பிகு  சொர்கத்தின் திறப்பு விழா என்றவுடன் கன்னா பின்னா என்று கற்பனை செய்து எதிர்பார்த்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.