Saturday, October 18, 2014

    சென்னையில் எங்கள் வீட்டு கொலு. 

    சுமார் 50 வருடங்களுக்கு முன் பொள்ளாச்சி அக்ரஹாரம் எப்படி இருந்தது!  கோயிலை ஒட்டிய தென்வடல் வீதியில் ஏறத்தாழ 100 குடும்பங்கள். என் வயதை ஒத்த நண்பர்களே 30 பேர் இருப்போம். நவராத்திரி வந்து விட்டால் ஒரே குஷி தான்.  பெரும்பான்மையோருக்கு கணக்குப் பிள்ளை உத்தியோகம் தான்.  ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் 7 குழந்தைகள். ஆனாலும் இருக்கிறதோ இல்லையோ நவராத்திரிக்கு கொலு எல்லா வீட்டிலும் உண்டு. சாயந்திரம் ஆனதும் அழுக்குப்பையை எடுத்துக்கொண்டு பட்சணம் கேட்கப் புறப்பட்டு விடுவோம். பொட்டுக்கடலை சர்க்கரை கலந்த பொடி மாவு, குட்டி குட்டி இனிப்பு ஆப்பம், வித விதமான  சுண்டல் வகைகள், கொஞ்சம் பணக்கார வீட்டில் நெய்ப் பலகாரங்கள், பொரி, கடலை மிட்டாய், சின்ன தோசை, இன்னும் என்னென்னவோ, எனக்கு மறந்து விட்டது. ஒவ்வொரு வீட்டிற்குள் நுழையும்போதும், வெளியே வரும்போதும் 'ஓ' வென்று பேரிரைச்சல் செய்வோம். பட்சணம் கொடுக்காத வீட்டிலிருந்து வெளியே வரும்போது, ' பொம்மக்கோல் ( கொலு இல்லை ) பட்சணம், வீட்டப் பாத்தா அவலட்சணம் ' என்று கத்திக் கொண்டே வருவோம். பொட்டுக்கடலை மாவை தெரியாமல் அப்படியே முழுங்கி மூச்சுத் திணறி பாடாவஸ்தை பட்டதும் உண்டு. பை இருந்தால் பையில், இல்லையென்றால் டவுஸர் பாக்கட்டில் திணித்துக் கொண்டு, அடுத்த வீதியில் இருந்த சத்திரத்துத் திண்ணையில் அத்தனையையும் கலந்து கட்டி அடிப்போம். வீட்டில் அம்மாவிற்குத் தெரிந்தால் கொலையே விழும் என்ற பயத்தில் தின்றாலும், அந்த கூட்டு பட்சணத்தின் சுவையே அலாதி. ஒரு பக்கம் இனிப்பு, ஒரு பக்கம் காரம், நடுநடுவே சின்ன சின்ன கடலை இத்யாதி உருண்டைகள் உடை படும் இனிய ஓசை என்று அனைவரும் பரவச நிலையை அடைந்து, இரவில் வீட்டை அடைவோம். 

      இப்பொழுது நவீன மயமாகிவிட்ட நிலையில் பட்சணம் கேட்க எந்த சிறுவர்களும் வருவதில்லை. சென்னைக்கு வந்த பிறகு, இரண்டு நாட்கள் முன்பு பொம்மைகள் வாங்க மயிலாப்பூர் சென்ற நான் மயங்கி விழாத குறை தான். என்ன கூட்டம், என்ன கூட்டம். பொரி கடலை வாங்குவது போல பொம்மைகளை வாங்க மக்கள் முட்டித் தள்ளுகிறார்கள். நவராத்திரியில் இன்று முதல் நாள். என் மனம் பொள்ளாச்சியில் அமர்ந்து, என் இளமைக் காலத்தை அசை போட்டுக்கொண்டு இருக்கிறது.

      அந்த நாளும் வந்திடாதோ?
 
               

மழையோ மழை

எதிரே பத்து பதினைந்து தென்னை மரங்கள். அவைகளுக்கும் கீழே பணிவோடு சில வாழை மரங்கள். வானத்திலிருந்து பூமிக்கு ஊசிப்படிகளென எங்கும் மழையின் தொடர்ந்த தூறல்கள். மழைத்துளிகள் முதலில் தென்னையில் விழுந்து, அதிலிருந்து வழுக்கி, வாழை இலைகளின் மேல் தெறித்து கீழே விழும் அற்புதம். இடை விடாத மெல்லிய சர சர ஓசை. வானம் பூமிக்குத் தந்த கொடை மழையை வீட்டினுள் சன்னல் கம்பிகள் வழியே அனுபவிப்பது சுகம்.